துத்துக்குடி, ஜூலை 18: தூத்துக்குடி வஉசி கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் ‘‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பேசியதாவது: வாழ்க்கையில் மிகவும் இனிமையான பருவம் கல்லூரி பருவம். கல்லூரி காலத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். சிந்திக்க கற்றுக் கொள்வதுடன் இந்த வயதில் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம். கல்லூரி காலம் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டம்தான் ‘‘நான் முதல்வன்”. தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களை நிறுவியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் படித்து முடித்தவுடன் டாடா நிறுவனம் நேரடியாக வேலைவாய்ப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால தலைவர்களாகிய உங்களை பெருமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று அறிவித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விச்செல்வத்தை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. மாணவ- மாணவிகள் மனது வைத்தால் சாதிக்கக் கூடிய வயது இதுவாகும். கல்லூரி புத்தகங்கள் தவிர உலகளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. நீங்கள் அறிவாற்றலை பெற்று சிந்தனை மிக்கவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, தைரியமுள்ளவர்களாக இருந்தால் வாழ்க்கை எளிதாகும். வானம் வசப்படும். உங்களால் எல்லா வகையிலும் முன்னேற முடியும், என்றார்.
முன்னதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நான் முதல்வன் – உயர்வுக்குப்படி ஸ்பாட் அட்மிஷன் பெற்றதற்கான ஆணையை 10 பேருக்கும், கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை 14 பேருக்கும், சத்துணவு பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும் புதுமைப்பெண் – திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு மற்றும் நான் முதல்வன் – உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சமூக நல அலுவலர் ரதிதேவி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரபு, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.