தஞ்சாவூர், ஆக. 15: தூத்துக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு சரக்கு ரயிலில் நேற்று 1,300 டன் உரம் வந்தது. 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவை, தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 1,300டன் யூரியா, சூப்பர் பாஸ்பேட், டிஏபி உரங்கள் 21 வேகன்களில் சரக்கு ரயிலில் தஞ்சாவூருக்கு நேற்று வந்தது. பின்னர் அங்கிருந்து, லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு லாரிகளில் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.