தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடிக்கு நாளை மறுதினம் வருகை தரும் அமைச்சர் கே.என்.நேரு, முடிவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை மறுதினம் (26ம் தேதி) தூத்துக்குடி வருகை தருகிறார். அன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்கிறார். இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு வாகன காப்பகம், நகர்ப்புற சுகாதார மையங்கள், காந்திநகர், கதிர்வேல்நகர், ராஜகோபால்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள போக்குவரத்து அலுவலக வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
புதிய கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அனைத்தும் நிகழ்ச்சிகளிலும் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே திமுக நிர்வாகிகள், பொதுமக்களும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.