திருப்போரூர், ஜூன் 14: கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, மீனவர்கள் கடையடைத்து ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கானத்தூர், ரெட்டிக்குப்பம் கடற்கரை பகுதியில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவர்களின் வீடுகள், வலை உலர வைக்கும் இடம், பொது கட்டிடங்கள் சேதமடைந்து விட்டன. இதையடுத்து, இப்பகுதி மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு ரூ.19 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் தீட்டி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து விட்டது. பணிகள் தொடங்கும் வேளையில் தனி நபர்கள் சிலரால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு பணிகள் தொடராமல் நிறுத்தப்பட்டு விட்டன.
இந்நிலையில், தூண்டில் வளைவு பணிகளை தொடங்கி நிறைவேற்றித் தரக்கோரி கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர்கள் சார்பில் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் பந்தல் அமைந்து நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று பிற்பகல் செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசின் சார்பில் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், பசுமைத் தீர்ப்பாயத்தில் விரைவில் வழக்கை முடித்து தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அரசின் இந்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று சார் ஆட்சியர் மாலதி ஹெலன் சேதமடைந்த கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.