நன்றி குங்குமம் டாக்டர் ;; ;‘‘வேலைப்பளுவும், தொழில்நுட்பமும் ஆக்டோபஸாக நம்மை ஆக்கிரமித்திருக்கும் சூழலில் தூக்கம் என்பது சவாலான விஷயமாக மாறிவருகிறது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தூக்கம் வருவதில் மட்டுமே பிரச்னை இல்லை. வந்த தூக்கத்திலும் பிரச்னை இருக்கிறது. அதற்கு Somnambulism என்று பெயர்’’ என்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவரான புவனேஷ்வரி.தூக்கத்தில் நடப்பது போன்ற குறைபாடுகளைக் கொண்டதுதான் Somnambulism என்பதையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.‘‘எல்லோருக்கும் தூக்கம் என்பது உடலின் அடிப்படை தேவை. தற்போது வந்திருக்கிற தொலை தொடர்பு சாதனங்கள் நம்முடைய தூக்கத்தை கெடுத்து, தூக்கம் என்பதை சவாலாக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில், தூக்கம் என்பது நாம் வழிந்து திணித்துநாம் செய்ய வேண்டியதில்லை. தூக்கம் தானாக நடைபெறுகிற ஒரு செயலாகும். அதற்கேற்ப நம் உடலை வைத்துக்கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். சராசரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறது ஆய்வுகள். தூங்குவதன் மூலம் நம்முடைய மூளை முழு ஓய்வு எடுத்து புத்துணர்வு பெறுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் முழு ஓய்வு எடுத்துக்கொள்கிறது.ஒருவருக்கு தூக்கம் அதிகமாக இருந்தாலும், தூக்கம் குறைவாக இருந்தாலும் அது கவனிக்க வேண்டிய பிரச்னைதான். இதையே தூக்கக் குறைபாடு(Insomnia) என்கிறோம். அதுபோல ஒருவருக்கு தூக்கத்தின்போது ஏற்படுகிற பிரச்னைகளை Somnambulism என்கிறோம். Somnambulism பாதிப்பு தூக்கத்தில் எழுந்து நடப்பதோடு இதில் தூக்கத்தில் திடீரென எழுந்து பேசுவது, எழுந்து நடப்பது, எழுந்து உட்கார்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளையும் உள்ளடக்கியது. இந்த பாதிப்பு மரபு ரீதியாக ஒருவருக்கு ஏற்படுகிறது என ஆராய்ச்சிகளில் கண்டறிந்துள்ளனர். அதேபோல தூக்கத்தில் எழுந்து நடக்கும் பாதிப்பை மருத்துவர்கள் இன்னும் ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக தூக்கத்தில் பேசுவது, எழுந்து உட்காருவது என ஆயிரத்தில் ஒரு சிலர் இருப்பார்கள். இதேபோல் தூக்கத்தில் எழுந்து நடப்பவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள் என்பது மருத்துவர்கள் அனுபவப்பூர்வமாக கண்டறிந்த ஒரு உண்மை. மன ரீதியாக பாதிப்பு இருப்பவர்களுக்கும் இதுபோல பிரச்னைகள் இருக்கும். இதற்கு முறையான மனநல சிகிச்சை அளித்தால் விரைவில் சரியாகிவிடும். தூக்கத்தில் எழுந்து நடப்பது என்பது அவருடைய தூக்கத்தையோ அல்லது மனரீதியான பிரச்னையை பெரிதாக உண்டு பண்ணுவதில்லை. ஆனால், அவர் பாதுகாப்பாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கும். அதாவது அவர் தூக்கத்தில் எழுந்து நடப்பதால் அவர் எந்த விபத்திலும் சிக்கிவிடக் கூடாது என்பதுததான் இதன் முக்கியமான சிக்கல்’’ என்றவரிடம் இதற்கு சிகிச்சை என்னவென்று கேட்டோம்…‘‘இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு தனியான சிகிச்சை என்பது இல்லை. பொதுவாக ஒருவரை அதிகம் தூங்க வைப்பதற்கான மெலோட்டோன்களை தூண்டிவிடுகிற மாத்திரைகளை அவரின் தேவைக்கேற்ப தருகிறோம். அதுபோல அவர் தூங்குகிற இடம் சூழல் அவர் நன்றாக தூங்குவதற்கு ஏற்ப உருவாக்கி வைத்திருக்க வேண்டியதும் அவசியம். அவர் தூக்கத்தில் எழுந்து நடக்கும்போது அவர் பாதுகாப்பாக இருப்பதற்கான சூழல் அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு ஒருவருக்கு நீண்ட நாள் நீடிப்பதில்லை. உரிய சிகிச்சை காரணமாக சரியாகிவிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் நீடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்கிறார்.– க.இளஞ்சேரன்
தூக்கத்தால் வரும் பிரச்னைகள்…
previous post