கூடலூர், அக். 20: பள்ளிக் குழந்தைகளுக்கான நல்வாழ்வுத் திட்டத்தின் மூலம் கருநாக்கமுத்தன்பட்டியில் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவ துறையின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான நல்வாழ்வுத் திட்டத்தின் மூலம் நேற்று காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையம் சார்பில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
மழைக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் காய்ச்சல் போன்றவற்றை வராமல் தடுக்கும், விட்டமின் சி அதிக அளவில் உள்ள நெல்லிக்காய் லேகியம் மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அதிமதுரம், சாதிக்காய், சுக்கு, தாளிசம் போன்ற 10 மூலிகைகள் அடங்கியுள்ள உரைமாத்திரை இரண்டும் கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தை காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய சித்த மருத்தவ அலுவலர் டாக்டர் சிராஜூதீன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் மொக்கப்பன், கிராம சுகாதார செவிலியர் கமலவள்ளி, பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினாள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.