துறையூர், ஜூன் 18: துறையூர் அருகே காளிப்பட்டியில் வீட்டில் தனியாக பெண்ணிடம் திருட முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்(54). நேற்று இவரது வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றார். அவரை பார்த்து சுந்தரின் மனைவி சத்தமிட்டார். அப்போது அக்கம்பக்கத்தினர் மர்மநபரை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். அவர் கொளக்குடி அருகேயுள்ள அப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் லலித்குமார் (25) என்பதும், துறையூர் பேருந்து நிலையம், சிஎஸ்ஐ, மதுராபுரி பகுதிகளில் திருடுவதற்கு நோட்டமிட்டு கடைசியாக காளிப்பட்டியில் சுந்தர வீட்டில் திருட நுழைந்ததாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் லலித்குமாரை துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லலித்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
துறையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் திருட முயற்சி
0