துறையூர், ஆக.23: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஏரகுடி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 1166 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துமாரி, குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ, சமூக நலம் துறை, கல்வி துறை, வேலை வாய்ப்பு துறை உள்ளிட்ட அரசின் பல்துறைகளுக்கும் சேர்த்து நலத்திட்ட உதவிகள் கோரி 1166 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் எரகுடி, சிறு நாவலூர்,பாதர் பேட்டை, காமாட்சிபுரம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பாதர்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை, எரகுடி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, துணைத் தலைவர் கவிதா, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி மற்றும் அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.