திருச்சி, நவ.8: திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கான இன்ப தீபாவளி நிகழ்ச்சியை நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கணேசன், அனூஜ் டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி அறக்கட்டளையின் நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார். திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. அதில் பெண்களுக்கு புடவை, துண்டு மற்றும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது. அதேபோல் ஆண்களுக்கு வேஷ்டி, துண்டு மற்றும் இனிப்பு,காரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார் .
பின்னர் கலெக்டர் பிரதீப்குமார் பேசுகையில், துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றால் அந்த சமுதாயம் பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். துப்புரவு பணியாளர்கள் கட்டாயம் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்கள் உடல்நலத்துடன் இருந்தால்தான் மக்களும், நிர்வாகமும் ஆரோக்கியமாக இருக்கும். தீபாவளி உள்ளிட்ட பல முக்கிய பண்டிகைகளை ஒருசில அரசு துறைகள் தன்னுடைய குடும்பத்துடன் செலவிட முடியாமல் தங்களுக்கான பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அதில் துய்மை பணியாளர்களாகிய நீங்களும், அடுத்ததாக பேருந்து ஓட்டுநர்களும் பணியாற்றுவார்கள். எனவே தன்னலம் பாராமல் பிறர் நலம் பார்த்து அவர்களுக்காக எப்போதும் உழைத்திடவும், மகிழ்ச்சியாக வாழவும், உங்களுடைய பங்களிப்பு மிகப்பெரியது. எனவே உங்களோடு இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார். அதனை தொடர்ந்து அவர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.