பெரம்பலூர், நவ.29: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், அவருடைய அளப்பரிய பணிகள், ஆற்றல், திறன் அனைத்தும் அந்த தொகுதிக்கு மட்டுமன்றி மாநிலம் முழுவதும் கிடைக்கப்பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான பிரபாகரன், ஏற்கனவே நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசும்போது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என குரல் கொடுத்திருந்தார். அதே போல் 2022 டிசம்பரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அந்தத் துறையில் உலகமே வியக்கும் வகையில் சதுரங்கப்போட்டி, கார் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி சாதனை படைத்துள்ளார்.
பின்னர் அவர் தமிழக முதல்வருக்கு பக்கபலமாக துணை முதல்வராக ஆக வேண்டும் எனவும் சட்ட மன்றக் கூட்டத்தொடரில் முதல்முறையாகக் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம்முதல் தமிழ்நாடு துணை முதல்வராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, புதிய பல திட்டங்களை செயல்படுத்தி, ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களை செம்மைப் படுத்தி, இந்தியாவில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாகக் கட்டமைத்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன்,சென்னைக்கு சென்று உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளருமான தயாநிதி மாறன் எம்பி, அருகில் இருந்தார்.