பெரம்பூர், மே 28: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீவிபத்தில், 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. உணவுப்பொருள் வழங்கல் துறை, வருவாய் துறை, மாநகராட்சி, காவல்துறை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்றனர். இதில், தீயில் எரிந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி சேகர் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் ரொக்கம், அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள், புடவைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.