ஓமலூர், ஏப்.14: ஓமலூர் அருகே புதுநல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (39) என்பவர், லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் சேலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு, பழங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளை லோடு ஏற்றிக்கொண்டு செல்கிறார். இந்நிலையில், நேற்று பழங்களை அடுக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள் லோடை ஏற்றிய சரவணன், லாரியில் சிறுசிறு பழுதுகளை சரி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் வெல்டிங் பட்டறையில் லாரியை விட்டுள்ளார். அப்போது, சிதறிய தீ பொறிகள் லாரிக்குள் விழுந்தது. அப்போது லாரியில் அடுக்கி வைத்திருந்த, பிளாஸ்டிக் பெட்டிகள் மீது தீப்பொறி விழுந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் தீ பிடித்து வேகமாக பரவி லாரி முழுவதும் எரிய துவங்கியது.
இதனால், அதிர்ச்சியடைந்த பட்டறை தொழிலாளர்கள், லாரியை நிறுத்தி, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிடித்து, லாரி முழுவதும் பரவியது. சுமார் ஒரு மணி நேரமாக லாரி முழுக்க தீ பிடித்து எரிந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் புகை மண்டலமாக மாறி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஓமலூர், காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போரடி தீயை அனைத்தனர். தீ விபத்தில், லாரி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.