மாமல்லபுரம், நவ.2: தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாமல்லபுரம் தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில், தீயணைப்புத்துறை வீரர்கள், தீபாவளி பண்டிகை குறித்து விபத்தில்லா பட்டாசை பயன்படுத்த வேண்டி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மாமல்லபுரம் பேருந்து நிலையம், பஜனை கோயில் தெரு, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீபாவளி தினத்தன்று விபத்து ஏற்படாதவாறு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், பாதுகாப்பாக பட்டாசுகளை கொளுத்த வேண்டுமென தத்ரூபமாக செய்து காட்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், துண்டு பிரசுரத்தில், பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் தன் குழந்தைகளை தங்கள் கண்முன்னே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளிகளில் நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ராக்கெட் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை டின் மற்றும் பாட்டில்களில் வெடிக்க கூடாது. வெடிக்காத மற்றும் நனைந்த பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சிக்க கூடாது. நீண்ட, ஊதுபத்தி உபயோகத்தில் பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது. அவ்வாறு, கொளுத்தும்போது முகத்தை திருப்பியவாறு வைத்துகொள்ள வேண்டும் உள்பட பல்வேறு நெறிமுறைகள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றிருந்தது.