திருவண்ணாமலை, ஆக.28: செங்கம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ₹3 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, செங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் வாசு(42). அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வாசு தீபாவளி சேமிப்பு சீட்டு நடத்தி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, செங்கம் அடுத்த நாச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பவர் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், வீரபத்ரா ஏஜென்சி எனும் பெயரில் கடந்த பல ஆண்டுகளாக தீபாவளி சேமிப்பு சீட்டு நடத்தி வந்ததும், நகை, பட்டாசு, பரிசு பொருட்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டதால் செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணத்தை செலுத்தி இருப்பதும் தெரியவந்தது. ஆனாலும், முதிர்ச்சி காலம் முடிந்த பிறகும் சேமிப்பு பணத்தையோ அல்லது அறிவித்தபடி பரிசு பொருட்களையும் வழங்காமல் வாசு தொடர்ந்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. அந்த வகையில் சுமார் ₹3 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வாசுவை கைது செய்தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.