மேல்மலையனூர், நவ. 9: தீபாவளியை முன்னிட்டு அவலூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12ம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு, துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை களை கட்டி வருகிறது. இதுபோல் ஆடு, மாடுகளை வாங்கவும் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான எதப்பட்டு, மேல் வைலாமுர், மேல்மலையனூர், செவலபுரை, தாயனூர் கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளிலிருந்து வளர்க்கப்படும் ஆடு மற்றும் மாடுகளை வாங்க திருவண்ணாமலை வேலூர், கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் அவலூர்பேட்டை வாரந்சந்தைக்கு வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கிச் சென்றனர். இதில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்தனர்.நேற்று அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்ததால் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் 7 மணிக்கு மேல் அதிக அளவு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கால்நடை வாங்கி சென்றனர். ஒரு ஆட்டின் விலை ரூ.3000 முதல் 25 ஆயிரம் வரையிலும், மாடுகள் விற்பனை ரூ.10 ஆயிரத்திலிருந்து 50,000 வரையிலும் விற்பனையானது. அவலூர்பேட்டை வாரச்சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றது.