கோவை, நவ. 4: தீபாவளி பண்டிகையையொட்டி நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பாக 108 பெண்கள், ஆண்கள் ஆகியோருக்கு விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் புத்தாடை, இனிப்புகளை வழங்கினார். அப்போது பாபுஜி சுவாமிகள் கூறுகையில், ‘‘இந்த தீபாவளிக்கு தாய் வீட்டு சீதனமாக 108 பெண்களுக்கு புத்தாடையும் இனிப்பும் தரப்படுகிறது. அதர்மம் என்றும் வெற்றி பெறாது தர்மம் தான் ஜெயிக்கும் என்ற தத்துவத்தை உணர்த்துவது தான் தீபாவளி. தீபாவளியன்று தீபங்களை வரிசையாக ஏற்றி இறைவனை ஜோதி வடிவாக காண வேண்டும்.
தர்மத்தின் வடிவமாக இருந்த கிருஷ்ண பரமாத்மா அதர்மத்தின் வழியில் நடந்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி. அதனால் இந்த தீபாவளி நாளில் காலை 5 மணியளவில் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். குடும்பத்துடன் புத்தாடை அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு பட்டாசுகள் வெடித்து சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும். ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்ய வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்கள் முருகன், நாச்சிமுத்து, இன்ஜினியர் முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, உமா மகேஸ்வரி, தங்கதுரை, பாக்கியலட்சுமி, சரஸ்வதி மாதாஜி உள்பட பலர் பங்கேற்று பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.