வந்தவாசி, மே 27: வந்தவாசி ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகேஷ்- வெண்ணிலா. முருகேஷ் சென்னையில் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா சென்னை ஆவணக் காப்பகத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கவின் மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி – அன்புபாரதி. மூவரும் 11, 12-ஆம் வகுப்பு வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
மூவரும் இளங்கலை வேளாண்மை பட்டதாரிகள். யுபிஎஸ்சி தேர்வுக்காக சென்னை அண்ணா நகரிலுள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்திலும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தனர். இதற்கிடையில் கவின்மொழி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் ஆணையராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கவின்மொழி, நிலாபாரதி இருவரும் 2024-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று, நேர்காணலுக்குச் சென்றிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியானது. இதில் கவின்மொழி, அகில இந்திய அளவில் 546- வது ரேங்கில் தேர்வாகி, ஐபிஎஸ் அதிகாரிக்கான பயிற்சியினைப் பெறவுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான யுபிஎஸ்சி வனப்பணிக்கான தேர்வு முடிவில் அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24 வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரியாகவும், தங்கை ஐஎப்எஸ் அதிகாரியாகத் தேர்வானதை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.