செய்யாறு, மே 10: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ., பி.பி.ஏ போன்ற படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தெரிவித்துள்ளார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் நா.கலைவாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை உதவி மையம் 08.05.2023 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்காக 8.05.2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். பதிவு செய்ய இறுதி நாள் 19.05.2023-ம் தேதி ஆகும். விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் வருகிற 23.05.2023-ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாடப்பிரிவுகள், சுழற்சி ஆகிய விவரங்கள் கல்லூரி இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. 8.5.2023 முதல் 19.5.2023 வரை இம்மையம் செயல்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு 25.05.2023 முதல் 29.05.2023 வரை நடைபெறவுள்ளது. பொதுக்கலந்தாய்வு முதல் கட்டமாக 30.05.2023 முதல் 09.06.2023 வரையிலும் இரண்டாம் கட்டப் பொதுக்கலந்தாய்வு 12.06.2023 முதல் 20.06.2023 வரை நடைபெறவுள்ளது. முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு 22.06.2023 முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக மாணவர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.2 பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் ெதரிவித்துள்ளார்.