சென்னை, நவ.5: தி.நகர் பகுதியில் உள்ள டீ கடைகளில் அதிகளவு ரசாயனம் கலந்த டீ தூள் பயன்படுத்தப் படுவதாக, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமாருக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில், நேற்று தி.நகர் பகுதி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நடேசன் பூங்கா அருகில் நடைபாதையில் அமைந்துள்ள டீ கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு டீ தூள் சப்ளை செய்யும் நபர் கொண்டு வந்த சக்ராவதி டீ டஸ்ட் என்ற பாக்கெட்டை சந்தேகத்தின் பேரில், பிரித்து ஆய்வு செய்தனர். அதில் தயாரிப்பு முகவரியோ, தயாரிப்பு தேதியோ என எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், அந்த டீ தூளை பிரித்த அதிகாரிகள் சாதாரண நீரில் பரிசோதித்தனர். அதில் கலப்படமாக பெருமளவு ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இத்தகைய செயற்கை ரசாயனங்கள் மனித உடலுக்கு பெரும் தீங்கை விளைவிப்பதோடு, புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த நபர் வைத்திருந்த 68 பாக்கெட் டீ தூளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த கலப்பட டீ தூள் பாக்கெட்டுகள் கோயம்புத்தூரில் இருந்து பெறப்படுவதாக சப்ளையர் தெரிவித்தார்.
மேலும், தயாரிக்கும் இடம், நபர் குறித்தும் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டீ தூள் மாதிரிகள் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பபட்டுள்ளது. ஆய்வு அறிக்கைக்கு பின்னர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.