குலசேகரம், மே 14: குலசேகரம் தேர்வுநிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் 18183 மக்கள் பயன்பெறும் வகையில், பேரூராட்சிக்குட்பட்ட 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, 2 திறந்தவெளி கிணறு மற்றும் 1 தரைமட்ட கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குலசேகரம் தினசரி சந்தையில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆகியவற்றை கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டதோடு, திட்டத்தின் அவசரம் கருதி பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சிவா, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திற்பரப்பு தேர்வு நிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.21 கோடி மதிப்பீட்டில் 24848 மக்கள் பயன்பெறும் வகையில், பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் 2 உறை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேனங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணியினை ஆய்வு செய்தார். திற்பரப்பு அருவியில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை ரூ.4.31 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. அருவியில் பயணிகள் வசதிக்காக ஆக்ரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு பாதை சீரமைத்தல், பயணிகள் ஓய்வறை, பூங்கா, நவீன கழிப்பறை, ஆடை மாற்றும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் தொடங்கியது முதல் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் அவ்வப்போது தடைப்பட்டு பணிகள் கிடப்பில் கிடப்பதும் மீண்டும் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு என பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கலெக்டர் திற்பரப்பு அருவியில் நடைபெறும் தமிழ்நாடு சுற்றுலா துறையின் ரூ. 4.31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதை கண்டு ஒப்பந்ததாரர் தரப்பினரிடம் பணிகளை விரைந்து முடிக்கா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த ஆய்வின் போது சுற்றுலா அலுவலர் காமராஜ், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.