திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 4, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகளை சேர்ந்த எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு பகுதி சத்தியமூர்த்தி நகர் உள்பட பல இடங்களில் மட்டும் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்படாமல் உள்ளது.
இதனால் அடிக்கடி மின் வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவதுடன், மின் தடை ஏற்பட்டு வருகிறது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றவேண்டும். மேலும், கிரிஜா நகர், திருவீதியம்மன் நகர், ஆதிதிராவிடர் காலனி, கன்னியலால் லேஅவுட், மகாலட்சுமி நகர், முல்லை நகர், ஜெய்ஹிந்த் நகர், ஜோதிநகர், சண்முகபுரம், வி.பி. நகர், டி.எஸ்.கோபால் நகர், சார்லஸ் நகர் பகுதிகளில் பழுதாகி உள்ள டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
பராமறிப்பு பணிகளுக்கு தடையில்லாத உதிரிபாகங்கள் மற்றும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்’’ என்று கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுசம்பந்தமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுகொண்ட ராதாகிருஷ்ணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.