திருவொற்றியூர், செப். 3: திருவொற்றியூர் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்களை கைது செய்தனர். திருவொற்றியூர் போலீசார் மாட்டு மந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி மேம்பாலத்தின் கீழ் காருக்குள் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரது காரை சோதனையிட்டபோது அதில் கஞ்சா பொட்டலமும், போதை மாத்திரையும் ஏராளமாக இருந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருவொற்றியூர் அடுத்த சாத்தங்காடு, ராஜாஜி நகரைச் சேர்ந்த கார் டிரைவரான யோகேஸ்வரன் (21) என்பது தெரிய வந்தது.
இவர் தனது சக நபர்களான அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), பிராங்க்ளின் கேப்ரியல் (23) ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இடைத்தரகர்களிடம் இருந்து வாங்கி அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து திருவொற்றியூர் உதவி ஆணையர் மற்றும் இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை போலீசார் கார்கில் நகர் பகுதியில் பதுகியிருந்த மணிகண்டன் மற்றும் பிராங்க்ளின் கேப்ரியல் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, 120 போதை மாத்திரைகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.