திருவையாறு, அக். 17: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருவையாறில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் திருவையாறு தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் அள்ளூர் சாமிகரிகாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், தென் பெரம்பூர் இளங்கோவன், அப்பாராசு, விஜயகுமார், நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு சம்பா – தாளடி சாகுபடி செய்வதை உறுதி செய்து அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுவை இழப்பீடு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு சட்டப்படி உரிமையுள்ள காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்ட கர்நாடகத்துக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும், நெய்வேலியிலிருந்தும் கூடங்குளத்திலிருந்தும் கர்நாடகம் செல்லும் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும், மேகதாது அணைக்கான தொடக்கப் பணிகள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.