திருவாடானை, அக்.17: திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் நவராத்திரி திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழா நடைபெறும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகமும், விழா கமிட்டினரும் செய்து வருகின்றனர்.