திருவாடானை, ஆக. 19: திருவெற்றியூர் ஊராட்சியில் குப்பை வண்டி இழுக்க ஆள் இல்லாததால் பேட்டரியால் இயக்கப்படும் வாகனம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், கிராம ஊராட்சியாக இருந்த போதிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிக மக்கள் வந்து செல்வதால் தேங்காய் பழ கடைகள், பேன்சி கடைகள், டீக்கடைகள், ஹோட்டல் என அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக குப்பைகளும் அதிகளவில் சேர்கின்றன. இந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வெளியேற்றி வருகின்றனர்.
போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் சேகரிக்கப்படும் குப்பைகளை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர் யாரும் ஆண்கள் இல்லாததால் பெண் தூய்மை பணியாளர்கள் வண்டியை இழுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வளர்ந்து வரும் இந்த ஊராட்சிக்கு பேட்டரியால் இயங்கும் இரண்டு குப்பை வண்டிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.