திருவெறும்பூர், ஜூன் 3: திருவெறும்பூர் அருகே மதுபான கடை பார் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் அருகே காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர் டோல்பிளாசா பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை பாரில் சப்ளையராக உள்ளார். இந்நிலையில், இவர் கடையில் பணியிலிருந்தபோது அவரிடம் வந்த வாழவந்தான்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விமல் என்பவர் சரக்கு கேட்டதற்கு, “இங்கு விற்பதில்லை கடை திறந்ததும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், கணேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.750பணத்தை விமல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிவு செய்து விமலை (34) கைதுசெய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.