திருவெறும்பூர், மே 12: திருவெறும்பூர் அருகே பார் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோயில் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஆரோண்ராஜ். இவரது மகன் விவேக் (37). இவர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு மது பான கடை பாரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருவெறும்பூர் மேற்கு கணபதி நகரை சேர்ந்த பிரவீன் குமார் (33), வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி (35) தஞ்சை விண்ணமங்கலம் புத்தராயநல்லூரை சேர்ந்த பெரியசாமி (32) ஆகிய 3 பேரும் காசு கொடுக்காமல் மது கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தர முடியாது எனக் கூறியதை தொடர்ந்து, வெளியில் சென்று மது அருந்தி விட்டு வந்து போதையில் பாருக்குள் நுழைந்தவர்கள் பாரிலிருந்த டேபிள் சேர் உடைத்து சேதப்படுத்தினர். அதைக் கேட்ட விவேக்கையும் தாக்கி உள்ளனர். மேலும் அங்கு கிடந்த பீர்பாட்டிலை எடுத்து விவேக்கை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விவேக் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிபதி உத்தரவின் படி மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்