திருவெறும்பூர், ஜூன் 10: திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் குணசீலன் (75). ஓய்வுபெற்ற பெல் ஊழியர். இவரது மனைவி ராஜகுமாரி (70). நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இவர்களது மகன் அசோக்குமார் (45) பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டு மாடியில் வீடு கட்டுவதற்காக உள்ள கம்பியில் குணசீலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெங்களூரில் உள்ள அவரது மகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அசோக்குமார் கொடுத்த தகவலின் பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.