திருவில்லிபுத்தூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து துறை சார்பில், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி, திருவில்லிபுத்தூர் பகுதியில் ஆறு சாலைகளில் இந்த மாதம் சிறப்பு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி திருவில்லிபுத்தூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா ஆகியோர் காவல்துறை உதவியுடன் சிறப்பு வாகன சோதனை நடத்தினர். இதில், போக்குவரத்து விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், அதிக நபர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்லுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சிக்னலில் நிற்காமல் தள்ளி நிறுத்துதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 109 வாகன சோதனை நடத்தப்பட்டன. இதையடுத்து விதிமீறியவர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 2000 அபராதம் வசூலிக்கப்பட்டது என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.