திருவிடைமருதூர், ஜூலை.4: திருவிடைமருதூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதையடுத்து ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் வரும் 45 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மக்களை சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள குருமூர்த்தி நகர், பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சிங்கை சிவா, வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜக்குபாலா, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் குமரவேல், முன்னாள் துணைத்தலைவர் புகழேந்தி, வார்டு செயலாளர் வீர சுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.