தரங்கம்பாடி, மே 24: திருவிடைக்கழியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி மாத சதய திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. திருச்செந்தூரில் முருகபெருமான் சூரனை வதம் செய்த பின் மாயையால் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது குமாரன் இரணியாசூரனை வதம் செய்து இத்தலத்தில் சிவபூஜை செய்து அந்த பாவதோஷம் நீங்கியதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவனும் முருகனும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிறப்பு வேறு எந்த கோயிலிலும் இல்லை. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் பங்குனி மாத சதய திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் முருகப்பெருமான் அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் முடிவில் நிலைக்கு வந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.