பெரம்பூர், மே 30: சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டு சத்தியவாணி முத்து நகர் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி 438 வீடுகள் கட்டப்பட்டு 384 பயனாளிகளுக்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் வீடுகளை வழஙகினார். அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சுற்றி இருந்த மக்கள் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 54 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாமன்ற உறுப்பினர்கள் ரமணி லோகேஷ், சரவணன், புனிதவதி எத்திராசன், அம்பேத்வளவன், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பருதி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.