திருவாரூர், ஜுன் 3: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 6 அரசு கலை கல்லூரிகளில் இருந்து வரும் 4 ஆயிரத்து 37 இடங்களுக்கு மொத்தம் 34 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் துவங்கியது. அதன்படி, நேற்று விளையாட்டு வீரர்கள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி திருவாரூர் திருவிக அரசு கலைகல்லு£ரியில் இருந்து வரும் ஆயிரத்து 178 இடங்களுக்கு 19 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்றைய சிறப்பு பிரிவில் 60 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில் 20 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
மேலும் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் இருந்து வரும் 360 இடங்களுக்கு 2 ஆயிரத்து 780 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்று 4 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதேபோல் மன்னார்குடி அரசு கல்லூரியில் இருந்து வரும் ஆயிரத்து 449 இடங்களுக்கு 5 ஆயிரத்து 719 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்று 33 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரியில் இருந்து வரும் 230 இடங்களுக்கு 758 மாணவிகள் விண்ணப்பித்த நிலையில் 2 மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. நன்னிலம் அரசு கல்லு£ரியில் இருந்து வரும் 540 இடங்களுக்கு 4 ஆயிரத்து 500 பேர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்று 8 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முத்துப்பேட்டை அரசு கல்லு£ரியில் இருந்து வரும் 280 இடங்களுக்கு 2 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்று 4 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து வரும் ஒரு மகளிர் கல்லு£ரி உட்பட 6 அரசு கல்லூரிகளிலும் மொத்தமுள்ள 4 ஆயிரத்து 37 இடங்களுக்கு 34 ஆயிரத்து 891 பேர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் நாளாக நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் 71 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் நாளை அறிவியல் பாடப் பிரிவுக்கும், நாளை மறுதினம் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுக்கும், 6ந் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுக்கும் இந்த கலந்தாய்வானது நடைபெறுகிறது. எனவே இந்த கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளுக்கான நாட்களில் உரிய ஆவணங்களுடன் காலை 10 மணி அளவில் கலந்து கொள்ளுமாறும், இந்த கலந்தாய்வின் போது மேற்கண்ட நாட்களில் ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்குரிய கலந்தாய்வில் பங்கு பெற உள்ள மாணவர்களது முதன்மை பட்டியல் மற்றும் காத்திருப்பு பட்டியல் துறை வாரியாக கல்லூரியின் தகவல் பலகையில் தெரிவிக்கப்படும்.
இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பம், மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ், மற்றும் விளையாட்டு பிரிவு போன்ற முன்னுரிமை பட்டியல் குறித்த சான்று, வங்கி புத்தகம் மற்றும் ஆதார் கார்டு நகல் மற்றும் வருமான சான்று மற்றும் 5 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.