திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் மாவட்டத்தில் கிராமபுற இளைஞர்களுக்கு வழங்கப்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் தகுதியுடையவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்வித் தகுதியாக குறைந்தது 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
8ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப் பொருட்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல்தளம், பவித்திரமாணிக்கம் தொலைபேசி எண்: 04366-29914) மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அலுவலகத்தை 9444094386 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.