திருவாரூர், மே 27: திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 288 மனுக்களை கலெக்டர் மோகனச்சந்திரனிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தையல்நாயகி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.