திருவாரூர், பிப். 20: திருவாரூர் மாவட்டத்திலிருந்து கடந்த 50 நாட்களில் வெளி மாவட்டங்களில் பொது விநியோக திட்ட அரவைக்காக ரயில் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் மெ.டன் நெல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு காரீப் பருவத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 1ந் தேதி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நவம்பர் மாதம் வரையில் 86 ஆயிரத்து 822 மெ.டென் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ. 210 கோடி 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பின்னர் சம்பா அறுவடை நெல் கொள்முதலுக்காக கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் 538 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.