திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமை துணை வேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இயங்கும் மருத்துவ மையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ரத்ததான முகாமானது மேற்படி பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், ரத்த தானம் என்பது பல்வேறு உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்பட கூடியது. மனிதநேயமிக்க இந்த செயலை செய்ய முன்வந்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துகொள்வதாக தெரிவித்தார். முகாமில் பல்கலைகழக மருத்துவர்கள் டேவிஸ், விஷ்ணுபிரியா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரத்த வங்கி மருத்துவர் பிரியா மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கிய நிலையில் கடந்தாண்டு இந்த மத்திய பல்கலைக்கழகம் சார்பாக 156 யூனிட் ரத்த தானம் செய்ததற்காக பாராட்டு சான்றிதழ்களை ரத்த வங்கி மருத்துவர் பிரியா வழங்கினார்.