நீடாமங்கலம், மே 27: நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் மேலத்தெரு காளியம்மன் கோயில் நான்காம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஒரத்தூரில் உள்ள விநாயகர், காளியம்மன், பாலமுருகன் கோயில் நான்காம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் 25 ஆம் தேதி மதியம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோரையாற்றிலிருந்து நேற்று காலை பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்தனர். மதியம் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு அக்னி கப்பரை நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் ,மாலை ரதக்காவடியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஒரத்தூர், மேலத் தெரு கிராமவாசிகள், கிராம நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் சுய உதவி குழுவினர் செய்து வருகின்றனர்.