திருவாரூர், நவ. 8: திருவாரூர் நகரின் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகள் பிடித்து கோசாலையில் விடப்படும் என நகராட்சி கமிஷனர் தாமோதரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகபகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்ப்போர், அவற்றைபொது இடங்களில் நடமாடவிடாமல் அவர்களது குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் காணப்பட்டால் அவற்றை பிடித்து தங்கள் பொறுப்பில் ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சிமற்றும் கிராம ஊராட்சிகளுக்கும் காவல் துறைக்கும் மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கால்நடைகளை கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் சாலைகளில் திரியவிடுவதன் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது என்றும், இதுகுறித்து மாடு வளர்ப்போர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இதனையும் மீறி மாடுகள் சாலைகளில் திரிந்தால் நகராட்சி ஊழியர்கள் மூலம் அந்த மாடுகள் பிடிக்கப்படும் என்பதுடன் அபராதம் செலுத்தினாலும் மீண்டும் உரிமையாளர்களிடம் அந்த மாடுகள் ஒப்படைக்கப்படாமல் கோ சாலையில் விடப்படும் என்றும் நகராட்சி கமிஷ்னர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.