திருவாரூர், பிப். 27: வழக்கமாக அனைத்து மாதங்களிலும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் போதிலும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் மகாளயா அமாவாசை போன்ற தினங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோன்று வருடத்தின் அனைத்து மாதங்களிலும் தேய்பிறை 14வது தினத்தில் சதுர்த்தசி நட்சத்திரத்தில் சிவன் ராத்திரி வரும்போதும் மாசி மாதம் தேய்பிறை தினத்தில் சதுர்த்தசி நட்சத்திரம் அன்று மகா சிவன் ராத்திரி என்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக விரதம் இருந்து வரும் போதிலும் இந்த மகா சிவன் ராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை தரிசிப்பது தெரிந்தோ, தெரியாமலோ செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்ற ஐதீகம் இருந்து வருகிறது.
இதனையொட்டி இந்த தினத்தில் சிவ பக்தர்கள் பெரும்பாலானோர் விரதம் இருந்து சிவனை வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு நடைபெற்ற இந்த சிவராத்திரி தினத்தில் பெரும்பாலான சிவ பக்தர்கள் தங்களது பாவங்கள் நீங்க வேண்டும் என சிவனை தரிசனம் செய்தனர். மேலும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயில், கேக்கரை காசி விசுவநாதர் கோயில் உட்பட பல்வேறு சிவ தலங்களில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் இந்த சிவாலயங்கள் அனைத்தும் இரவு முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது மட்டுமின்றி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.