திருவாரூர். ஜூன் 27: திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எஸ்பி கருண்கரட் துவக்கி வைத்து உறுதிமொழியினை எடுத்துகொண்டார்.
உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது எஸ்பி கருண்கரட் தலைமையில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் கல்வியை விட முதலில் சுய ஒழுக்கத்தினை கற்றுக்கொண்டு அதனை பின்பற்றிட வேண்டும். மாவட்டத்தை பொருத்தவரை போதை பொருட்களை தடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி நடப்பு ஆண்டில் மட்டும் கடந்த 5 மாத காலத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி மணிகண்டன், கல்லூரி முதல்வர் சுஜரித்தா மாக்டலின், நுகர்வோர் அமைப்பு பொது செயலாளர் ரமேஷ் மற்றும் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.