திருவாரூர், ஜூலை 16: தஞ்சை போலீஸ் சரகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவும், பணியிட மாறுதல் மூலமாகவும் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சத்யா பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பாக எஸ்.பி அலுவலகத்தில் தனிபிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக சனல்குமார் என்பவர் பதவி உயர்வு மூலம் பொறுப்பேற்றுள்ளர்.
இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜா தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி கபிஸ்தலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கும், நன்னிலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜ் குடவாசல் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.