திருவாரூர், ஜூலை 18: திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுதினம் திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஆர்.டி.ஓ சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோட்ட அளவிலும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டமானது திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டமானது நாளை மறுதினம் (20ம் தேதி) மாலை 4 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கி வரும் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக் கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேற்படி, கூட்டத்தில் திருவாரூர் கோட்ட அளவிலான முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்டிஓ சங்கீதா தெரிவித்துள்ளார்.