திருவாரூர், ஜுன் 25: திருவாரூரில் அலுவலர்கள் உதவியுடன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ஏலம் கேட்பதால் பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கோரி விவசாயிகள் சாலைமறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக கடந்த 3 ஆண்டு காலமாக 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் 4வது ஆண்டாக நாடப்பாண்டிலும் இதேபோன்று 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது இந்த பருத்தி பயிரானது அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் அதிலிருந்து பருத்தி பஞ்சினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் ஓழுங்குமுறை விற்பனை கூடத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை காலையும், மாலை பூந்தோட்டத்திலும், புதன்கிழமை மாலை வலங்கைமான் மற்றும் மன்னார்குடியிலும், வெள்ளிகிழமை மாலை குடவாசலிலும் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருவாரூரில் நடைபெற்ற ஏலத்தின் போது அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.77க்கு பதில் ரூ.55 மட்டுமே விலை போனதாக கூறப்படுகிறது. இதனால் உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும், அலுவலர்கள் உதவியுடன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ஏலம் கேட்பதை தடை செய்ய கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து நேற்று மாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் டவுன் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று அலுவலர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் விவசாயிகள் மீண்டும் 2வது முறையாக தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று திருவாரூர் ஆர்.டி.ஓ சௌமியா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.