திருவாரூர்: திருவாரூரிலிருந்து நாமக்கல் மாவட்ட பொது விநியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 பருவத்தில் குறுவை, சம்பா மற்றும் கோடை நெல் சாகுபடியையடுத்து விவசாயிகளிடமிருந்து 8 லட்சத்து 50 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவற்றிலிருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக அரைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்துக்காக அரிசி மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட பொது விநியோக திட்டத்துக்காக, நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.