திருச்சி, ஜூன் 5: திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் நடந்து முடிந்த திருப்பணிகளை துவங்கி வைக்கவும், புதிய திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று திருச்சிக்கு வந்தார்.
திருவானைகோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த அமைச்சர் சேகர் பாபு, கோயில் உள்ளே நுழைந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தை ஆய்வு செய்து அங்கு சில பகுதிகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கோயில் நூலகத்திற்கு சென்று அலமாறிகளை அமைத்து, வரும் பக்தர்கள் கோரிக்கைகேற்ப குறைந்தபட்சம் 2 ஆயிரம் புத்தகங்கள் வரையாவது வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தவனம், கழிவுநீரோடை, கோயில் யானை அகிலாவின் குளியல்தொட்டி, பசுமடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, யானை மற்றும் பசுக்களுக்கு சத்தான உணவு வழங்கவும், அவை தங்கும் கொட்டறைகளை சுத்தமாக பராமரிக்கவும், பசுக்களை பராமரிக்க பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட்டார். யானை அகிலாவிற்கு பழங்கள் கொடுத்து, அகிலாவின் பராமரிப்பு முறை, வழங்கப்படும் உணவுகளையும் யானை பாகனிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கோயிலில் உள்ள தங்கத்தேரை ஆய்வு செய்து, பக்தர்களுக்கு தங்கத்தேர் குறித்து தெரிவிக்க கோயில் வளாகத்தில் பதாகைகளை வைக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தார்.இந்த ஆய்வின்போது மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோயில் உதவி ஆணையர் சுரேஷ், ரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.