திருவாடானை, ஆக.26: திருவாடானை பகுதியில் உள்ள சிறுபாசன கண்மாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை பகுதியில் அதிகளவில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. நூறு ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறுகண்மாய்கள் ஏந்தல் மற்றும் ஊரணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.
இதில் பொதுப்பணி துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் சிறுபாசன கண்மாய்கள் போன்றவைகள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்பட வில்லை. இதனால் ஆக்கிரமிப்புகளாலும் தூர்வாரப்படாத காரணத்தால் மேடாகி வருகின்றன.
இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியம் சார்பில் சிறுபாசன கண்மாய்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இவைகள் பொதுவாக தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இவற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.