திருவாடானை, ஜூலை 16: திருவாடானை ஒன்றியத்தில் 11 அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல் கட்டமாக காலை உணவு திட்டம் நேற்று முதல் துவங்கப்பட்டது. தமிழக அரசு அனைத்து குழந்தைகளும் கல்வி பெறவேண்டும் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலை உணவு திட்டத்தை தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முதல் கட்டமாக திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் சிகே மங்கலத்தில் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் எம்எல்ஏ கரு.மாணிக்கம் துவக்கி வைத்தார். யூனியன் தலைவர் முகமது முக்தார், திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாடானை ஒன்றியத்தில் காரங்காடு தொடக்கப்பள்ளி, எட்டுக்குடி ஆர்சி தொடக்கப்பள்ளி, அரிய பூவையலில் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி, தொண்டி வெல்கம் தொடக்கப்பள்ளி, ஓரியூர் அருளானந்தர் தொடக்கப்பள்ளி, ஆண்டா ஊரணி சிறுமலர் தொடக்கப்பள்ளி, கங்கை விலாசம் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, சீக்கிய மங்களம் புனித பிரான்சிஸ் தொடக்கப்பள்ளி, புனித சின்னப்பர் தொடக்கப்பள்ளி, நெடுமரம் புனித சின்னப்பர் தொடக்கப்பள்ளி, சீ.கே.மங்கலம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆகிய 11 அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று முதல் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.