திருவாடானை, ஏப். 13: ஏர்வாடி அருகே வித்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் லெனின் (31). இவர் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் 2ம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் லெனின் நேற்று பணிக்கு செல்வதற்காக அவரது டூவீலரில் ராமநாதபுரத்தில் இருந்து திருவாடானை நோக்கி திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் மேல்பனையூர் பாலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே மேலையூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான உடையார் மகன் பழனி (39) ஓட்டி வந்த டூவீலர் நேருக்குநேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர். இதில் பழனியுடன் டூவீலரில் வந்த மேலையூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மனைவி கலா (35) தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். உடனே அக்கம் – பக்கத்தினர் காயமடைந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த திருவாடானை போலீசார் இறந்த லெனின் மற்றும் பழனி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கொத்தனார் பழனிக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், ஜெஷ்வந்த (12), திவ்யதர்ஷன் (11) என்ற இருமகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.