திருவாடானை,நவ.21: திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூர் ஊராட்சியில் கல்லூர், பாரதிநகர், மாங்குடி, இளமணி, கொட்டாங்குடி, கிளவண்டி, கோனேரிக்கோட்டை, சூச்சணி, திருவிடைமதியூர், மணிகண்டி, சந்திரகோட்டை உள்ளிட்ட சுமார் 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கல்லூருக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
மேலும் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகவும், வீட்டுவரி, தொழில்வரி, கட்டிட வரைபட அனுமதி மற்றும் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காகவும் அப்பகுதி மக்கள் தினசரி இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனு கொடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பருவமழை காலங்களில் பெய்த தொடர் கனமழையால் இந்த கட்டிட சுவர்களின் வழியாக மழைநீர் கட்டிடத்தில் இறங்கி கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுவதால் இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் உள்ள தலைவர், ஊராட்சி செயலாளர், தூய்மைப் பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனையே பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்சமயம் இந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால், தற்காலிகமாக இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிராமசேவை மைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆகையால் சேதமடைந்த இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.